புராணங்களில், ஸ்ரீமத் பாகவதம் விசேஷமானது; அதிலும், ஸ்ரீகிருஷ்ண அவதாரம் பெருமை மிக்கது. கண்ணனாக வந்து, ஆயர்பாடியில் பகவான் விளையாடியது; வெண்ணை, பால், தயிர் திருடியது; மாடு மேய்த்தது முதல், பூதனாவதம், சகடாசுரவதம், காளிங்க நர்த்தனம், கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து ஆயர்பாடி மக்களை காப்பாற்றியது; கோபிகைகளுடன் ராசக்ரீடை புரிந்தது போன்ற விஷயங்களை பக்தர்கள் படித்தும், கேட்டும் மகிழ்வர்.

பக்தியைவிட, அதிகமாக பிரேமையை கண்ணனிடம் வைத்திருந்தனர் கோபிகைகள். கண்ணனைக் காணாத ஒரு வினாடியை ஒரு யுகமாக நினைத்தனர். இப்படிப்பட்ட கோபிகைகளை விட்டு விட்டு, மதுரா நகரம் போய் விட்டான் கண்ணன்; அதனால், மிகுந்த துக்கப்பட்டுக் கொண்டிருந்தனர் கோபிகைகள். கோபிகைகளை சமாதானம் செய்து வரும்படி உத்தவர் என்பவரை அனுப்பினார் பகவான். கோகுலத்துக்கு வந்த உத்தவர், கண்ணனிடம், அவர்கள் வைத்திருந்த பக்தி, பிரேமையைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அவரது எண்ணங்கள் இப்படி ஓடின…

சகல ஜகத்ரூபியான கோவிந்தரிடத்தில், இந்த கோபிகைகள் இடைவிடாமல் பக்தி செய்வதால், இவர்களே மேலானவர்கள். மகரிஷிகளும், நாமும் சம்சார பந்தத்திலிருந்து பயந்து, ஒதுங்கி வந்து கிருஷ்ணனிடம் பக்தி செய்கிறோம். இவர்கள் அப்படியல்ல, சதா காலமும் கிருஷ்ணனையே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பகவானிடம் பக்தி செய்து, அவருடைய கதைகளைக் கேட்டு ஆனந்தப்படுபவர்களே பாக்கியசாலிகள். இப்படிப்பட்டவர்கள் எந்த குடியில் பிறந்தவர்களானாலும் மேலானவர்களே… பகவானிடம் பக்தி செய்யாதவர்கள், எந்த உயர்குலத்தில் பிறந்திருந்தாலும், அதில் பெருமை என்ன இருக்கிறது!

இந்த கோபிகைகள், பந்துக்களையும், தர்மத்தையும் விட்டு, வேதங்களாலும் தேடக் கூடிய பகவானுடைய பாதத்தை அடைந்திருக்கின்றனரே… அவர்களுடைய பாதத் துளிகளை அடைந்துள்ள இந்த பிருந்தாவனம், மரம், செடி, கொடிகளும் மேலானவைகளே! எந்த கோபிகைகள், கிருஷ்ண சரிதத்தை கானம் செய்வதால் மூவுலகையும் பரிசுத்தப்படுத்துகின்றனரோ, அந்த கோபிகைகளின் பாதத் துளியை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன்…

இந்த மனித ஜென்மாவை விட்டால், வேறு எந்த ஜென்மாவில், என்ன பிறவியில் பக்தி செய்ய முடியும்? ஒரு கோவிலுக்குப் போக முடியுமா; ஒரு தெய்வ தரிசனம் செய்ய முடியுமா; ஒரு தான, தர்மம் செய்ய முடியுமா; சத் விஷயத்தை கேட்க முடியுமா? ஆக, இந்த மனித ஜென்மா வீணாகக்கூடாது; மேலும், மேலும் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும். அதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

எவன் ஒருவன் இந்த ஸ்ரீ பாகவத சாஸ்திரத்தை அர்த்தத்துடன் வாசிக்கிறானோ, அவன் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களும் தீரப் பெறுவான். இதில் சந்தேகமில்லை. இதில் பாதி ஸ்லோகத்தையாவது அல்லது கால் ஸ்லோகத்தையாவது வாசிப்பானாயின், ராஜசூய, அஸ்வமேத யாகங்களின் பலனைப் பெறுவான். சரீரத்தை விடும் காலத்தில் இந்தக் கதையைக் கேட்பானாயின், அவனுக்கு ஸ்ரீமன் நாராயணன் தனது வைகுண்ட லோகத்தைக் கொடுப்பான். இந்தக் கதையை ஒரு தடவையாவது கேளாதவனுடைய ஜன்மம் பயனற்றதே. இந்தக் கதையைக் கேட்கும்படியான பாக்கியம் கோடி ஜன்மங்களில் செய்த புண்ணியங்களினால் தான் கிடைக்கும்.

ஏக ஸ்லோக பாகவதம் !

ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம்,கோபி க்ருஹே வர்த்தனம்,

மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

கம்சச் சேதன கௌரவாதி ஹனனம், குந்தீ சுதா பாலனம்

ஏதத் பாகவதம்  புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

பொருள்: 

ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

கோபியர் வீட்டில் வளர்ப்பு

மாயா உருவ பூதனையின் அழிவு

கோவர்த்தன மலையின் உயர்வு

கம்ச, கௌரவர்கள் அழிவு

குந்தீ மகன் காப்பு

இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திரு வடிகளே சரணம் !

Post a Comment

Previous Post Next Post