காலத்தின் ஓட்டத்தில் சுழலும் யுக சக்கரங்கள்

கிருதயுகம் , திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்த நான்கு யுகமும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் அல்லது தேவயுகம் எனப்படும்.

யுகம் என்பது காலத்தைக் கணக்கிட உதவும் ஒரு பொதுவான அலகு. மொத்தம் 4,32,000 ஆண்டுகள் சேர்ந்தது ஒரு யுகம் என்று அழைக்கப்படும். இந்து புராணங்களின்படி நான்கு வகையான யுகங்கள் இருக்கின்றன. அவை முறையே கிருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், மற்றும் கலியுகம் என்பனவாம். ஒவ்வொரு யுகமும் வெவ்வேறான கால அளவைக் கொண்டது.

பொதுவாக 1 யுகம் : 4,32,000 ஆண்டுகள்
கிருத யுகம் : 4 யுகங்கள் (17,28,000 ஆண்டுகள்)
த்ரேதா யுகம் : 3 யுகங்கள் (12,96,000 ஆண்டுகள்)
துவாபர யுகம் : 2 யுகங்கள் (8,64,000 ஆண்டுகள்)
கலியுகம் : 1 யுகம் (4,32,000 ஆண்டுகள்)

பூமியில் இந்த யுகங்கள் சுழற்சி முறையில் வரிசையாக நிகழும். முதலில் கிருதயுகம், பிறகு த்ரேதாயுகம், அதன்பிறகு துவாபரயுகம், பிறகு கடைசியாக கலியுகம் என வரிசையாக நடக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. கலியுகம் முடியும் சமயத்தில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் தோன்றி தீயசக்தியான "கலி"யுடன் போரிட்டு வெல்வார். பிறகு புதிய உலகம் பிறக்கும். கிருதயுகம் தோன்றும்.
கிருதயுகத்திலிருந்து கலியுகம் வரையிலான, இந்த ஒரு முழுமையான சுழற்சிக்கு சதுர் யுகம் என்று பெயர். மொத்தம் 10 யுகங்களின் கால அளவைக்கொண்டதே ஒரு சதுர்யுகம்.

1 சதுர்யுகம் = கிருதயுகம்(4) + த்ரேதாயுகம்(3) + துவாபரயுகம்(2) + கலியுகம்(1) = 10 யுகங்கள்.
ஒரு சதுர்யுகத்தின் மொத்த கால அளவை, ஆண்டுகளில் கூறினால் 43,20,000 ஆண்டுகள் வரும். இதைப்போல 72 சுழற்சிகள் நடந்து முடிந்தால் அது ஒரு மனுவந்தரம் என்று அழைக்கப்படும். அதாவது 72 சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு மனுவந்தரம். அதேபோல 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். மற்றொரு 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு இரவு. ஆக மொத்தம் 28 மனுவந்தரங்கள் சேர்ந்தது தான் பிரம்மாவின் ஒரு நாள்.
1 சதுர்யுகம் = 10 யுகங்கள்
1 மன்வந்தரம் = 72 சதுர்யுகங்கள்
1 கல்பம் = 14 மனுவந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்
1 மகா பிரளயம் = 14 மனுவந்திரங்கள் = பிரம்மாவின் ஒரு இரவு
1 பிரம்மா நாள் = (1 கல்பம் + 1 மகா பிரளயம்) = 28 மன்வந்தரங்கள்

இதுபோல பிரம்மா மொத்தம் 100 ஆண்டுகள் உயிர் வாழ்வார். அதற்குப் பிறகு இந்தப் பிரபஞ்சமே அழிந்து மறுபடியும் புதிய பிரம்மா பிறப்பார். புதிய உலகைப் படைப்பார்.

Post a Comment

Previous Post Next Post