திருமாலின் ஐந்து நிலைகள் !

 அடியார்களுக்கு அருள்புரிவதற்காக ஐந்து விதமான நிலைகளில் திருமால் காட்சி தருகிறார். அவை,

1. பரநிலை - வைகுண்டத்தில் முக்தி அடைந்த ஜீவாத்மாக்களுக்குத் தரிசனம் தந்தருளும் பரவாசுதேவன்.

2. வியூஹ நிலை - தேவர்களின் குறைகேட்டு அவர்களுக்கு அருள்புரிவதற்குத் தயாராகப் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள்.

3. விபவ நிலை - மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணாதி அவதாரங்கள்.

4. அந்தர்யாமி நிலை - அனைத்து உயிர்களுக்குள்ளும், உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் இறைவன்.

5. அர்ச்சை நிலை - கோயில்களிலும் நம் இல்லங்களிலும் நமக்கு அருள்புரிவதற்காக விக்கிரக வடிவில் காட்சி தரும் இறைவன்.

அர்ச்சை நிலையின் சிறப்பு

இந்த ஐந்து நிலைகளுள் அர்ச்சை என்ற நிலை கடைசியாகச் சொல்லப்பட்டிருந்தாலும், மற்ற நான்கு நிலைகளைக் காட்டிலும் அர்ச்சையே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. எல்லையில்லாத கருணை நிறைந்தவராகவும், எளிமையின் எல்லை நிலமாகவும் அர்ச்சை நிலையில் இருக்கும் இறைவனை நாத்திகர், ஆத்திகர், நல்லவர், தீயவர், மனிதர், மிருகம் என அனைவரும் காணலாம், வணங்கலாம், வணங்கி அருள்பெறலாம். 

அர்ச்சை நிலையின் வகைகள் ....

1. ஸ்வயம் வியக்தம் - இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும்.

2. தைவிகம் - பிரம்மா, இந்திரன், சூரியன் போன்ற தேவர்கள் இறைவனை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தால், அதை தைவிகப் பிரதிஷ்டை என்று சொல்வார்கள். தைவிகம் என்றால் தேவர்களால் செய்யப்பட்டது என்று பொருள். உதாரணமாக, காஞ்சீபுரத்தில் பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அத்தி வரதர், குடந்தையில் சூரியனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரபாணிப் பெருமாள் உள்ளிட்டோர் தைவிகப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள்.

3. ஆர்ஷம் - முனிவர்கள், ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களை ஆர்ஷம் என்று சொல்கிறோம். மார்க்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒப்பிலியப்பன் கோயில், கோபில கோப்பிரளய ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் உள்ளிட்டவை ஆர்ஷம் என்ற பிரிவின் கீழ் வரும்.

4. மானுஷம் - அரசர்கள், பக்தர்கள் உள்ளிட்ட மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருத்தலங்கள் மானுஷம் என்றழைக்கப்படும். கீழத் திருப்பதியில் ராமாநுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில், பஞ்ச பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கேரளாவில் உள்ள திருவித்துவக்கோடு உள்ளிட்டவை இந்தப் பிரிவில் அடங்கும்.இந்த நான்கு விதமான திருத்தலங்களிலும் இறைவன் முழு சக்தியுடனும் முழு சாந்நித்தியத்துடனும் திகழ்கிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனினும், இறைவன் தானே விக்கிரக வடிவில் ஆவிர்ப்பவித்த இடங்கள் என்பதால், இவற்றுள் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள் தனிச்சிறப்பு பெற்றவையாகக் கொண்டாடப் படுகின்றன.

எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்

 “ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிச்ச ஸ்ரீமுஷ்ணம் தோதபர்வதம் ஸாளக்ராமம் புஷ்கரம் நரநாராயணாச்ரமம் நைமிஷம் சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. நாங்குநேரி
5. முக்திநாத்
6. புஷ்கரம்
7. பத்ரிநாத்
8. நைமிசாரண்யம்

என்னும் எட்டு திருத்தலங்களும் நாராயண மந்திரமாகிய எட்டெழுத்து மந்திரத்தில் உள்ள எட்டு எழுத்துகளையும் குறிப்பதாகவும் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

ஓம் நமோ நாராயணா !

Post a Comment

Previous Post Next Post