ஓம் சாந்தி மூன்று முறை சொல்வது ஏன்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
சாந்தி என்றால் அமைதி எனவும் பொருள்படும். மந்திரங்கள் உச்சாடனம் செய்து முடிக்கும் போது இறுதியாக “ஓம் சாந்தி:, சாந்தி:, சாந்தி:” என்று முடிப்பார்கள்.
இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது. நம்முடைய நூல்களைப் புரட்டிப் பார்த்தால் அதற்கான அரிய தத்துவம் நமக்கு புரியும்.
ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் மூன்று விதமான துன்பங்களில் இருந்து நீங்க வேண்டும். இதைப் பற்றி சாங்கிய யோக சூத்திரம் முதல்வரியில் கூறுகின்றது. அந்த மூவகை துன்பங்கள்:
1) அதிதைவீகம் (நம் சக்திக்கு மீறிய ஒன்றால் ஏற்படுவது)
2) அதிபௌதீகம் (பௌதீக பொருட்களால் ஏற்படுவது)
3) அதியாத்மிகம் (நம்மால் ஏற்படுவது)
#அதிதைவீகம்
என்பது நம்மால் கட்டுப்படுத்தமுடியாத, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றால் வரும் துன்பமாகும். நம் சக்திக்கு மீறிய ஒன்றுதான் இயற்கை.
வெள்ளம், புயல், நிலநடுக்கம், ஆழிப்பேரலை, எரிமலை வெடிப்பு போன்றவை இயற்கையிடமிருந்து வரும் துன்பங்கள் ஆகும்.
இந்த துன்பங்களை தடுத்து நிறுத்தும் சக்தி சாமானிய மனிதர்களுக்குக் கிடையாது.
#அதிபௌதீகம்
என்பது உலகத்தில் இருக்கும் ஜடப்பொருட்கள், உயிரினங்கள் போன்றவற்றிலிருந்து வரும் துன்பங்கள் ஆகும்.
இவற்றுள் மனிதன், மிருகம், தாவரம், உயிரற்றப் பொருள் ஆகியவை அடங்கும்.
உதாரணமாக: ஒருவர் நம்மை வாய்ச்சொல்லால் துன்பப்படுத்துதல், ஆயுதத்தால் தாக்குதல், கையால் தாக்குதல்.
பாம்பு கடி, தேள்கடி, டிங்கு, மலேரியா, வனவிலங்கு தாக்குதல், விஷசெடி தீண்டல், கட்டிடங்கள் சரிந்து விழுதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்து போன்றவை.
#அதியாத்மிகம்
என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் துன்பமாகும். இதுவே மிகவும் ஆபத்தானது என சொல்லப்படுகின்றது.
இந்த வகையான துன்பத்திற்கு நாம் தான் முழு பொறுப்பு. நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதை இரண்டு வகையாகப் பகுக்கலாம்.
#உடலால் புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு உண்ணுதல் போன்ற செயல்களால் நம் உடலை நாமே துன்புறுத்திக் கொள்ளுதல்
#மனத்தால் தேவையற்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல், முறையற்ற விஷயங்களை நினைத்துக் கொண்டிருத்தல், கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற தீயகுணங்களைக் கொண்டிருத்தல்
#தீர்வுகள்
பதஞ்சலி யோக சூத்திரத்தில் துன்பங்களைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் தெளிவாக விளக்குகின்றார்.
துன்பங்கள் என்பவை கிலேஷங்கள் என்று சொல்லப்படுகின்றன. நம்முடைய சுய இயல்பைப் பற்றி நாம் அறியாமல், அறியாமையில் திளைத்திருப்பதால் தான் புத்திமலுங்கி நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்கிறோம் என பதஞ்சலி கூறுகின்றார்.
எனினும் எதிர்காலத்தின் துன்பங்களைத் தடுக்கும் அளவுக்கு நமக்கு ஆற்றல் உள்ளது என்பதை “ஹேயம் துக்ஹம் அனாகதம்” (2:16)-இல் குறிப்பிடுகின்றார்.
இந்த மூன்று நிலையிலுமான துன்பங்கள் நீங்கி எங்கும் அமைதி நிலவிடவே, ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என மூன்று முறை செப்பிக்கப்படுகின்றது.
அமைதியான இடத்தில், தூய்மையான பக்தி கொண்ட உள்ளத்தோடு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு ஓம் சாந்தி என செப்பித்து வந்தால் ஒரு மனிதன் இந்த மூன்று வகையான துன்பங்களில் இருந்தும் நீங்கிடலாம்.
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
Post a Comment