திருச் சோபுரம் சோபுர நாதர் திருக்கோயில் : 



வழிபட்டு அருள் பெற்றவர்கள் : உமை லட்சுமி சரசுவதி இந்திராணி மற்றும் பிற மகளிர் சோழ மன்னர் தேவி தியாக வல்லி, 
           திருச் சோபுரம் கடலூர் அருகே ஆலப் பாக்கத்திற்குப் பக்கத்தில் உள்ளது. சோ என்றால் நூறு என்று பொருள். நூறு பாக்கியம் பெற்றவர்கள் சௌபாக்கியவதி என்று போற்றப்படுகின்றனர். பிரம்ம புரமான சத்திய லோகத்துக் கலைமகள், விசுணு புரமான வைகுண்டத்து அலைமகள், இமய புரத்து மலை மகள், இந்திர புரத்து இந்திராணி மற்றும் இவை போன்று நூறு புரங்களைச் சேர்ந்த தேவியர்கள் அரச குமாரிகள் முனி பத்தினிகள் ஒன்றாகக் கூடி வந்து சுயம்பு லிங்கப் பரம்பொருளைப் பூசித்து வழிபட்டு நலம் அடைந்ததால் சோபுரம் என்று பெயர். சோபுர வாசிகளுக்கு அருளிய பரமேசுவரனுக்கு சோபுர நாதர் என்று திருநாமம். 

நிரந்தரமாய் நின்ற ஆதி (திருவாசகம்)  
 
ஊழி பல கண்டிருந்தார் போலும் (அப்பர்) 

    என தோற்றமும் முடிவும் இல்லாமல் ஊழி ஊழியாய் நிலைத்திருக்கும் எல்லாம் கடந்த சிவ இயல்பும் அருட்செயல்களும் யாராலும் புரிந்து கொள்ள முடியாதவை என்று பதிகம் முழுவதும் போற்றும் திருஞான சம்பந்தர் பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் சோபுரம் மேயவனே என்று முடிகின்றது. நூறு புரத்துப் பெண்கள் வழிபட்ட தலம் ஆதலால் தூவார பாலர்களுக்கு மாறாக விளக்கு ஏந்திய பாவைகளே நுழை வாசலின் இரு புறமும் உள்ளனர். யானை லட்சுமி தனிச் சந்நிதியில் உள்ளாள். 

  உமையவள் ருத்திராட்சம் பூ தாங்கித்தனிச் சந்நிதியில் திகழ்கிறாள். இயக்க நாதர் ஆடல் நாயகன் தனிச் சந்நிதியில் உள்ளார். 
 கை கூப்பித் தொழுது நிற்கும் அரி அயனுடன் லிங்கோற்பவர் காட்சி தருகிறார். 
 சோபுர நாதரை வழிபட்ட பின் அகத்தியர் பிரதிட்டை செய்து பூசித்த எட்டு பட்டை லிங்கம் தனிச் சந்நிதியில் உள்ளது. திருத்தொண்டத் தொகை நாயன்மாரை அடுத்து சுந்தரர் மாணிக்க வாசகர் சேக்கிழார் உள்ளனர். கோயிலுக்குத் திருப்பணி செய்த சோழ மன்னர், அவர் தேவி தியாக வல்லி மற்றும் கண்ணப்பர் உருவங்கள் உள்ளன. தியாக வல்லி உடையார் என்ற ஈசன் திரு நாமத்தைக் கல்வெட்டு கூறுகிறது. சுந்தர பாண்டியன் இத் திருக் கோயிலுக்குக் கரும்பு மா பலா வாழை பாக்கு வெற்றிலை முதலியவை நிறைந்த பதினோரு வேலி நிலத்தையும் மற்றும் கோயிலுக்குத் தேவையானதைப் பயிர் செய்து கொள்வதற்காகப் பதினாறு வேலி நிலத்தையும் அளித்துத் திருப்பணி புரிந்ததைக் கல்வெட்டு கூறுகிறது. மணலால் மூடப்பட்டிருந்த கோயில் வெளிக் கொணர்ந்து கட்டப்பட்டுள்ளது. இப்போதும் வெளிப் பிரகாரம் முழுவதும் மணலாகவே உள்ளது. சோழ அரசி தியாக வல்லி ஈசனுக்குத் தனிக் கோயிலும் கட்டியுள்ளார். இக் கோயில் உள்ள தலம் தியாக வல்லி என்று அழைக்கப்படுகிறது. இது சோபுரத்திற்கு அருகே உள்ளது. 

Post a Comment

Previous Post Next Post