நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராககோயில் கொண்டருளுகிறார். இதை, ரத்தின சபைஎன்று போற்றப்படுகிறது. சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள்.
அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது.
சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார்? கேட்டாள். அதற்கு பதிலளித்த சிவபெருமான், இவர்கள் என் அம்மை என்றார். வெகு அருகே வந்துவிட்ட காரைக்காலம்மையாரை, என்ன வரம் வேண்டும்?என சிவபெருமான் கேட்டபோது.....
அதற்கு காரைக்காலம்மை, எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார். அம்மை கேட்ட வரத்தை, அப்படியே ஆகட்டும் என்று அருளினார் சிவபெருமான். அந்தசமயத்தில், திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னனின் கனவில் அன்றே தோன்றினார் சிவபெருமான்.
காரைக்கால் அம்மையார் இங்குள்ள எம் கோயிலில் தங்கப் போகிறார், எனவே எனக்கு பின்புறத்தில், அவருக்காக ஒரு சன்னிதியை நீ எழுப்பும்படி கூறிவிட்டு மறைந்தருளினார். அதன்படியே அம்மன்னனும், நடராஜருக்கு பின்புறம் உள்ள இடத்தில், சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பி கட்டிவித்தான். சிவபெருமான் அருள் கிடைத்த காரைக்காலம்மையாரும், அதனுள் ஐக்கியமானார்.
இன்றுவரை இந்த நிமிட அளவிலும், இங்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதுவே, ஆலங்காட்டு ரகசியம். இந்த திருத்தலம் சிவன் கோயிலாக இருந்தாலும், இங்கு பெருமாள் கோவில்களைப் போல பக்தர்களுக்குத் தீர்த்தத்தையே இங்கு வழங்குகின்றனர்.
ஆச்சரிய அம்பிகை:
நடராஜரின் அருகிலுள்ள சிவகாமியை ஆச்சரிய அம்பிகை என்கின்றனர். சிவனுக்கு ஈடு கொடுத்து, காளி நடனம் ஆடியதைக் கண்ட அம்பிகை ஆச்சரியப்பட்டாள். இதனால் அவளுக்கு சமிசீனாம்பிகை என்று பெயர் ஏற்ப்பட்டது. இதற்கு ஆச்சரியம் அடைந்தவள் என்று பொருள்.
இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப் போகும் விதத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தும் இந்த சிலையின் அமைப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம். நடராஜர் ஆடிய போது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்கத்திற்கு ஆளாயினர். சுவாமி அவர்களைத் தன் தலையிலிருந்த கங்கை நீரைத் தெளித்து எழுப்பினார். இதனடிப்படையில் இங்கு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது.
நடுவர்களாக இருவர்:
சுனந்தரிஷி என்பவர் சிவநடனம் காண விரும்பி தவமிருந்தார். இவரைச் சுற்றி புற்று வளர்ந்து நாணல் புல் வளர்ந்து மூடியது. இதனால் இவருக்கு முஞ்சிகேசர் (முஞ்சி நாணல்)என பெயர் வந்தது. அதே சமயம், கார்கோடகன் என்ற நாகமும், செய்த தவற்றுக்கு மன்னிப்பு வேண்டி இங்கு தவமிருந்தது. இருவருக்கும் அருளிய சிவன், நடன போட்டிக்கு அவர்களை நடுவராக இருக்கச் செய்தார். சிவநடனத்தைக் காணும் பேறு இருவருக்கும் கிடைத்தது.
நாட்டிய காளி:
நடராஜருடன் போட்டியிட்ட காளிதேவிக்கு தனிக்கோயில்இங்கு உள்ளது. இவள் காலை தூக்க முயன்ற நிலையில் நாட்டிய காளியாக சாந்தமாக வீற்றிருக்கிறாள். இக்கலிகால வாழ்வு, மிக அபரீத ஆசைகளை உள்ளடக்கிக் கொண்டவை. இதில் வாழ்ந்து வரும்போது, நிறைய வினைப் பெருக்கங்களை பெருக்கி அதன் இயல்பாகவே வாழ்கிறோம். வாழ்வில் எது கிடைத்தாலும், சேமித்து வைத்தாலும், அது நமக்காக அது சொந்தமாகாது.
இறுதியில், நம் இறப்புக்கு அப்புறம், அது நம் உறவுகளுக்கோ, அடுத்தவர்க்கோ போய் விடும், அவர்களுக்கும் இதே நிலைதான். என்றும் இறுதி வரையும் ஒன்று மட்டுமே நம்மோடு இருக்கும், அது தானம் தர்மம் புண்ணியம் மட்டுமே. இதைச் செய்யாது விட்டோர், பின் விளைவு கண்டு வருந்துவர். இருப்பினும், பிறவாமையைப் பெற்றுக் கொள்வதுதான், கடைசி வழி. நம் செயலும், சிந்தனையும் நல்லதாக இருக்க வேண்டுமென்றால், நாம் சிவநெறிக்குள்ளாக பயணிக்க வேண்டும். பிறந்தோம், வாழ்கிறோம் என இருந்திடல் கூடாது.
இப்பிறப்பில், கர்ம வினைப் பயன்கள் இனி தொடராதிருந்து, பிறவிப்பயனை முடித்து, மீண்டும் பிறவாமையை பெற வேண்டுமே? அதனால்தான், பிறப்பை வெறுத்து, பிறவாமைக்கு முற்பட வேண்டுவது.
சிவன் இல்லையேல் இப் புவனம் இல்லை.
சிவன் இல்லையேல் சலனம் இல்லை.
சிவன் இல்லையேல் பயணம் இல்லை.
சிவன் இல்லையேல் எதுவும் இல்லை!
சிவன் இல்லையேல் சக்தி இல்லை!
அந்தச் சிவன் இல்லையேல் எந்த ஜீவன் இல்லை!
சிவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை!
என்றும் எதற்கும், எல்லையே இல்லாதவை சிவனே!!
ஓம் நமசிவாய
அவனருளால் அவன்தாள் வணங்குவோம்!
Post a Comment