இந்து தத்துவவாதிகளில் முன்னோடி இராமானுஜர். தாம் வாழ்ந்த காலத்தில் பெரும் தத்துவ மேதையாகவும் விஷ்ணு பரமாத்மாவின் பெரும் பக்தராகவும் திகழ்ந்தவர். இவருடைய பிறந்த தினம் ஶ்ரீ ராமனுஜ ஜெயந்தி என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திங்களில் திருவாதிரை நட்சத்திரம் வரும் அன்று இவருடைய அவதார திருநாள் கொண்டாடப்படுகிறது.
11 ஆம் நூற்றாண்டில் 1017 ஆம் ஆண்டில் ஶ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். இந்து தத்துவங்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகிற விசிஷ்டாத்துவைத்ததின் முன்னோடியாக விளங்கியவர்.
வடக்கு மற்றும் தெற்கின் வைஷ்ணவ மார்க்கத்தை ஒருங்கிணைத்த பெருமை இவரையே சாரும். தன்னுடைய இளம் வயதிலேயே சாஸ்திரங்கள் வேதங்கள் அனைத்தையும் கற்றும் தேர்ந்தார்.
எந்தவொரு வேதாந்த முறையும் உபநிஷதங்கள், பகவத்கீதை மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகிய மூன்றையும் அடிப்படையாக கொண்டே இருக்கின்றன என்பதை இவர் ஒப்புகொண்டார்.
இவர் விசிஷ்டாத்துவைத்ததின் சாரத்தை நாடெங்கும் பரப்பியவர். பிரம்ம சூத்திரத்திற்கு ஶ்ரீ பாஷ்யம் என்ற பெரும் போற்றுதலுக்குரிய உரையினை எழுதி ஆதி சங்கரரின் அத்வைத்த தத்துவத்திற்கு மாற்று சொன்ன பெரும் ஆன்மீக மேதை.
யோகசக்தியின் மூலம் பிரபந்தங்களை நம்மாழ்வரிடமிருந்து இவர் நேரடையாக பெற்றார் என்பது வைணவர்களின் நம்பிக்கை. மேலும் யமுனாச்சாரியாரின் முன்னனி சீடர்களான ஐவரில் திருக்கோட்டியூர் நம்பி முக்கியமானவர். இவரிடமிருந்து ஒரு முக்கிய உபதேசத்தை "யாருக்கும் வெளியிடக்கூடாது "என்று நிபந்தனையுடன் ராமனுஜர் பெற்றதாகவும். அதை அறிந்து கொண்ட பின் திருக்கோட்டியூர் கோவிலின் மேலேறி அந்நகரின் மக்கள் அனைவருக்கும் கேட்குமாறு உரக்க சொன்னார். இது குரு துரோகம் என கொந்தளித்தார் திருக்கோட்டியூர் நம்பி. இதனால் நீங்கள் நரகம் புகவும் நேரலாம் என இராமனுஜரை எச்சரித்தார். அதற்கு இராமானுஜர், இந்த மந்திர உபதேசத்தின் மூலம் மக்கள் அனைவரும் முக்தி பெறுவார்கள் எனில், நான் ஒருவன் நரகம் பூகுவதும் பாக்கியமே என உரைத்தார். இதனை கேட்ட திருக்கோட்டியூர் நம்பி அரங்கனிடம் இருக்கும் அதே கருணையும் அன்பும் இராமனுஜரிடம் இருப்பதை உணர்ந்து நெகிழ்ந்துருகினார்.
சிறந்த வேதாந்தியாக அறியப்பட்ட இராமனுஜர் பெரும் நூல்கள் பல எழுதியவர். இவர் பெரும் நிர்வாகியும் கூட. இன்றும் ஶ்ரீரங்கத்தில் நடைபெறும் சடங்குகள், சம்பிர்தாயங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு பொருளோதி உயிர்கொடுத்தவர் இவரே.
இறைவன் அனைத்துமாவான். அவரை தொழுகிற அடியார் துளியிலும் துளி என்பதை அழுத்தி சொன்னவர் இராமனுஜர்.
Post a Comment