கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடகரையில் அமைந்துள்ள சிவபெருமான் கோயில்.

மகாமகக் குளத்தின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை முதலிய நவகன்னியர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் காசியில் இருந்து அவர்களுடன் வந்து இங்கு தங்கினார். அதனால் காசிவிசுவநாதர் எனப் பெயர் பெற்றார். இத்தலத்தில் நவகன்னியர்களின் சிலை அவரவர் நிலத்தின் முகப் பாவனையுடன் அமைந்த திருமேனிகளுடன் எழுந்தருளியுள்ளனர். இராமபிரான் இராவணனை சங்காரம் செய்யும் பொருட்டு இத்தலத்திற்கு வந்து பெருமானருளை வேண்ட, பெருமான் இராமனுடைய உடம்பில் காரோணம் செய்ததால் பெருமானுக்கு காரோகணர் என்றும் பெயர் ஏற்பட்டது.

எப்புவனத்தவரும் தாம் தாம் இயற்றும் பாவங்கள் அனைத்தையும் போக்கடிக்கும் புண்ணிய நதிகள் கங்கை, யமுனை, கோதாவரி, நருமதை, சரஸ்வதி,. காவிரி, கன்னியாகுமரி, பயோட்டினி, சரயு என்பனவாகும். இந்த ஒன்பது நதிகளும் கன்னி உருவமுடையவர்கள். இவர்கள் தமிலாடியோர் கழித்த பாவத்தைத் தாங்க முடியாதவர்களாய், ஓரிடத்தில் கூடி என்ன செய்தால் பிழைப்பெய்தலாம் என்று யோசித்து திருக்கைலாயத்தையடைந்து சிவபெருமானை வேண்டினர். அப்போது சிவன் புன்னகை கொண்டு கன்னியரை நோக்கி, 'நீவிர் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம். கும்பகோணம் என்று ஒரு தலமிருக்கிறது. அது நமது வெள்ளியங்கிரியின் மிகச்சிறந்தது. அத்தலத்தின் தென்திசையில் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் சிம்ம ராசியில் குருவிருக்கும் வருடத்தில் மாசி மகத்தில் ஆடினால் பாவம் அனைத்தும் பறந்தோடும்' என்றார். கன்னியர்கள் கேட்டு மகிழ்ச்சியுற்று அவ்விடத்தைப் பற்றிக் கேட்க அவர், 'நதிக்கன்னிகைகளே நீவிர் எல்லோரும் காசியை அடைந்து காத்திருங்கள். யாம் சீக்கிரமே வந்து உங்களை அழைத்துக் கொண்டு போய்ச்சேர்வோம்' என்றார். கன்னியரும் அவ்வாறே செய்ய சிவபெருமான் கன்னியரை அழைத்துக்கொண்டு காசியைவிட்டு பூதகணங்கள் புடைசூழத் தேவகணங்கள் துதிபாட கும்பகோணத்தையடைந்து, கும்பேசராதிச் சிவகுறிகளை வணங்கி, மக நீராடச் செய்து வடகரையில் அவர்களோடு அமர்ந்தருளினார்.

இறைவன், இறைவி தொகு
இத்தலத்து இறைவன் காசி விசுவநாதர். சிவபெருமான் மேல் திசை நோக்கி உள்ளார். இறைவி விசாலாட்சி அம்பாள் தென் திசை நோக்கி வீற்றிருக்கிறார். மூலவரின் பாணம் சுயம்பு. பாணத்தில் கண்கள், காது, மூக்கு போன்ற அவயங்கள் அமையப்பெற்றிருப்பது

தனிச்சிறப்பு.

கோயில் அமைப்பு தொகு
வாயிலின் ராஜகோபுரத்தை அடுத்து நந்தி, பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன. மண்டபத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. உள் மண்டபத்தில் வள்ளிதேவசேனாவுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, கணபதி, கோமாஸ்கந்தர் சன்னதிகள் உள்ளன. இதே மண்டபத்தில் வலப்புறம் நவகன்னியருக்கான சன்னதி உள்ளன. அச்சன்னதியில் சரயு, கிருஷ்ணா, துங்கபத்திரா, கோதாவரி, காவேரி, சரஸ்வதி, நர்மதா, யமுனா, கங்கா ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் துர்க்கா, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி காணப்படுகின்றனர். கருவறையின் வலப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் கருவறையின் வலப்புறம் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் பின்புறம் பைரவர், சூரியன், சனீஸ்வரன், சந்திரன், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி,வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர்.

குடமுழுக்கு தொகு
2014 பிப்ரவரி 9 அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றதாகக் கல்வெட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post