இந்திர ஏகாதசி விரதம்


வீட்டில் எழும் துன்பங்களுக்கு காரணம் நம் முன்னோர்களுக்கு சரியான தர்ப்பணம் செய்யாமல் இருப்பதுதான். பித்ருக்களின் சாபத்தினால் ஏற்படும் துன்பங்கள்தான் இந்த உலகில் மிக கொடுமையானது. இதற்கு ஏகாதசி விரதம் இருப்பது நல்ல பலனை தரும்.

ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவை.

இந்த மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை 'இந்திர ஏகாதசி" என்று அழைக்கிறார்கள். அதன்படி நாளை   இந்திர ஏகாதசி கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பொருள் உண்டு. அதுபோல் இந்திர ஏகாதசி என்ற பெயருக்கும் ஒரு பொருள் உண்டு. இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். இந்த ஏகாதசியினை பற்றிய புராணக்கதை ஒன்று உள்ளது.

புராணக்கதை :

மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். நாரதரைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றான்.

பின்னர் நாரதர் வருகையின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரத்தை அனுபவித்து வருகிறார். அவர், என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்யச் சொல்லுங்கள்.

அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள் என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன் என்று கூறினார்.

தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலையாகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.

நரகத்தில் துயரப்படும் ஒருவரின் பெற்றோர்களின் சாபத்தால், பூலோகத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர் அதிக துயரத்தை அனுபவிக்க நேரிடும். அதனால் தங்களின் துயரத்தை போக்கி, பித்ருக்கள் நரகத்தில் இருந்து விடுபட ஐப்பசி மாதத்தில் விரதமிருந்து இறைவனை வழிபட வேண்டும்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

Post a Comment

Previous Post Next Post