விநாயகர் அகவல் பொருள் உரையுடன்
1. சீதக் களபச் செந்தாமரைப் பூம்,
பாத சிலம்பு பல இசை பாடப்

பொருள்: குளிர்ச்சியும் நருமணமும் பொருந்திய செந்தாமரை மலர் போன்ற பாதத்தில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமாக இசைக்க

2. பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்,
வன்ன மருங்கில் வளர்த்தழகு எறிப்பப்

பொருள்: பொன் அரைஞாணும் வெண்பட்டு ஆடையும். அழகிய இடையில் நன்கு பொருந்தி அழகை வீசிக் கொண்டிருக்க.

3. பேழை வயிறும் பெரும்பாரக்கோரும்,
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்.

பொருள்: பெரிய வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் விளங்கும் குங்குமம். நன்றி : தினமலர்.

4. அஞ்சு கரமும் அங்குச பாசமும்,
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்.

பொருள்: ஐந்து கரங்களும் அவற்றுள் இரண்டில் தரித்த அங்குசமும், பாசம் என்ற ஆயுதங்களும் இதயத்தில் இருக்கின்ற நீல வடிவழகும்.

5. நான்ற வாயும் நாலிரு புயமும்,
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்.

பொருள்: தொங்கிய துதிக்கையும்,நான்கு பெரிய தோள்களும், மூன்று கண்களும், மும்மதங்கள் கசிந்ததால் ஏற்பட்ட சுவடும்.

6. இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்,
திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்.

பொருள்: இரண்டு செவிகளும், ஒளிகின்ற பொற் கிரீடமும், மூன்று நூல்கள் சேர்ந்த பூணூலும், ஒளிவீசும் மார்பும் உடைய.

7. சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான,
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே.

பொருள்: சொற்களால் விளங்க முடியாத துரிய மெய்ஞானமாகிய அற்புத நிலையில் நிலைத்து நிற்க்கின்ற கற்பக மரத்தைப் போல விரும்பியதை கொடுக்கின்ற யானை முகத்தோனே.

8. முப்பழம் நுகரும் மூஷிக வாகன!
இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டி.

பொருள்: மா,பலா,வாழை.என்னும் முக்கனிகளை உண்பவனே, பெருச்சாளியை வாகனமாக கொண்டவனே, இப்பிறவியிலேயே என்னை ஆட்கொள்வதற்காக.

9. தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி,
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத். நன்றி : தினமலர்.

பொருள்: தாயைப் போலே என்முன் தோன்றி தொடர்ந்து வரும் பிறவிகளுக்குக் காரணமான அறியாமையை நீக்கி.

10. திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்,
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து.

பொருள்: திருத்தனமானதும் முதன்மையானதும் ஐந்து ஒலிகளின் சேர்க்கையான பிரணவத்தின் பொருள்: எனக்குத் தெளிவாக விளங்கும்படி என் உள்ளத்தில் புகுந்து.

11. குருவடி வாகிக் குவலயந் தன்னில்,
திருவடி வைத்துத் திறம் இது பொருள்: என.

பொருள்: குருவின் உருவில் பூமியில் தோன்றி நிலையான பொருள் எது என்பதை உணர்த்தி.

12. வாடா வகைதான், மகிழ்ந்தெனக்கருளிக்,
கோடா யுதத்தால் கொடு வினை களைந்தே.

பொருள்: கவலையின்றி ஆனந்தத்துடன் இருக்கும் வழியை எனக்கு அருளி உனது கடைக்கண் பார்வையில் கொடிய வினைகளையும் அகற்றி.

13. உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்,
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி.

பொருள்: உவட்டாத உபதேசத்தை என் செவியில் அருளி தெவிட்டாத தெளிவான ஞான இன்பத்தை அளித்து.

14. ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்,
இன்புறு கருணை இனிதெனக்கருளிக்.

பொருள்: ஐம்புலங்களை அடக்கும் வழியைக் கருணையுடன் இனிமையாக எனக்கு அருளி.

15. கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து,
இருவினைதன்னை அறுத்திருள் கடிந்து.

பொருள்: புலங்களை கடந்த உண்மையை எனக்கு அறிவித்து, இருவினைகளையும் அறுத்து அறியாமையிருளை விலக்கி.

16. தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி,
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே.

பொருள்: ஸாலோகம், ஸாமீபம், ஸாரூபம், ஸாயுஜ்யம் என்ற நான்கு உயர்ந்த முக்தி நிலைகளை எனக்கு அருளி. ஆணவம், கர்மம், மாயை, எனும் மூன்று மலங்களால் ஏற்படும் மயக்கத்தைப் போக்கி.

17. ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்,
ஐம்புலக் கதவை அடைப்பதுங்காட்டி.

பொருள்: பிரணவ மந்திரத்தின் துணையால் இவ்வுடலின் ஒன்பது வாசல்களையும் ஐம்புலங்களாகிய கதவுகளையும் அடைக்கும் வழியைக் காட்டி.

18. ஆறா தாரத்து அங்குச நிலையும்,
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே.

பொருள்: மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம்,மனிபூரகம்,அனாஹதம்,விசுத்தி,ஆஜ்ஞை எனும் ஆறு ஆதாரங்களையும் கடந்த நிலையைப் பெறுதற்கரிய பேறாக எனக்கருளி மௌன நிலையை அளித்து.
19. இடை பின் கலையின் எலுத்தறிவித்துக்,
கடையிற் சுழிமுனைக் கபாலமும் காட்டி

பொருள்: இடை, பிங்களை என்னும் நாடிகள் மூலம் உட்கொள்ளப்படும். பிராண வாயுவின் துணை கொண்டு குண்டலினியை சுழுமுனை வழியே கபால வாயில் வரை செலுத்தும் வித்த்தை எனக்கு அறிவித்து.

20. மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்,
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்.

பொருள்: அக்னி, சூரியன், சந்திரன் என்னும் மூன்று மண்டலங்களையும் ஊடுருவி நிற்கும் தூணாகிய சுழுமுனையின் அடியில் தொங்கிக் கொண்டிருக்கும் பாம்பாகிய குண்டலினியை எழுப்ப்பி. நன்றி : தினமலர்.

21. குண்டலி அதனில் கூடிய அசபை,
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து.

பொருள்: அக்குண்டலினிலிருந்து மௌனமாக ஒலிக்கும் அசபை என்றும் ஹம்ச மந்திரம் தெளிவாக ஒலிக்கும்படிச் செய்து.

22. மூலா தாரத்து மூண்டெழுகனலைக்,
காலால் எழுப்பும் கறுத்தறிவித்தே.

பொருள்: மூலாதாரமாகிய அக்னி மண்டலத்திலுள்ள கொழுந்து விட்டெரியும் குண்டலினியை மூச்சுக காற்றினால் ஏற்படும் பிராண சக்தியின் துணை கொண்டு எழுப்பும் வழியை எனக்கு அறிவித்து.

23. அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்,
குமுத சகாயன் குணத்தையும் கூறி.

பொருள்: குண்டலினியை ஸஹஸ்ராரத்தை அடையும் பொழுது ஏற்படும் அமுத நிலையையும் சூரிய நாடியாகிய இடையில் இயக்கத்தையும் எனக்கு விளக்கி.

24. இடச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்,
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்.

பொருள்: இடைச்சக்கரமாகிய விசுத்தி சக்கரத்தின் பதினாறு நிலைகளும் உடலாகிய சக்கரத்தின் பல்வேறு உறுப்புகளின் தன்மையும் எனக்கு விளங்கும்படிச் செய்து.

25. சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்,
என்முக மாக இனிதெனக்கு அருளிப்.

பொருள்: நம: என்று தூலமாகிய உச்சரிக்கப்படும் ஓம் நமச்சிவாய என்ற ஆறெழுத்து மந்திரமும் சூட்சுமமாக உணரப்பரம் ஓம் சிவாய என்ற நாலெழுத்து மந்திரமும் எனக்கு எளிதில் சித்திக்கும்படிச் செய்து.

26. புரியட்ட காயம் புலம்பட எனக்குத்,
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி.

பொருள்: சுவை, ஒளி, முதலிய பஞ்ச தன் மாத்திரைகள். மனம், புத்தி, அகங்காரம் என்ற எட்டயும் கொண்ட புரியட்டகத்தின் தன்மை எனக்கு விளங்கும்படி செய்து மூலாதாரத்திலிருந்து ஸஹஸ்ராரம் வரை எட்டு நிலைகளும் அனுபவமாகும்படிச் செய்து.

27. கருத்தினில் கபால வாயில் காட்டி,
இருத்தி முக்தி இனிதெனக்கு அருளி.

பொருள்: கபால வாயிலில் உள்ள சஹஸ்ராரம் என்னும் சக்கரத்தைக் காட்டி சித்திகளும் முக்தியும் எனக்கு அருளி.

28. என்னை அறிவித்து எனக்கருள் செய்து,
முன்னை வினையின் முதலைக் களைந்து.

பொருள்: என்னை நான் உணரும்படி எனக்கு அருள் செய்து முன் செய்த வினைக்கும் நன்றி : தினமலர். காரணமாகிய ஆணவ மலத்தை நீக்கி.

29. வாக்கும் மனமும் இல்லா மனோலயம்,
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து.

பொருள்: சொல்லும் எண்ணமும் கடந்த மனோலயம் என்னும் நிலையை எனக்கு அருளி என் உள்ளம் தெளிவாக இருக்கும்படிச் செய்து.

30. இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன, நன்றி : தினமலர்.
அருள்தரு ஆனந்தந்து அழுத்திஎன் செவியில்.

பொருள்: இருளும் ஒளியும் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டவை என்ற உண்மையை எனக்கு உணர்த்தி எனக்கு ஆனந்தத்தை அருளி.

31. எல்லை இல்லா ஆனந்தம் அளித்து,
அல்லல் களைந்தே அருள் வழி காட்டி.

பொருள்: எல்லை இல்லாத ஆனந்தத்தை அளித்து துன்பங்கள் தவிர்த்து அருள் வழியைக் காட்டி.

32. சத்ததின் உள்ளே சதாசிவம் காட்டி,
சித்ததின் உள்ளே சிவலிங்கம் காட்டி.

பொருள்: நாதமாகிய புறவுலகிலும் சித்தமாகிய அகவுலகிலும் சிவனைக் காணும்படிச் செய்து.

33. அணுவிற்கு அணுவாய் அப்பாலுக் அப்பாலாய்,
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி.

பொருள்: சிறியவற்றிற்குச் சிறியதாகவும் பெரியவற்றுக்கு பெரியதாகவும் உள்ள பொருள்: என் உள்ளேயே கணுமுற்றி நின்ற கரும்பாக நேரில் அனுபவித்து உணரக் கூடிய ரசமாக இருப்பதைக் காட்டி.

34. வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்,
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி.

பொருள்: சிவ வேடமும் திருநீறும் விளங்கும் ஸாருப்ய நிலையை எனக்கு நிலையாக அளித்து மெய்த் தொண்டர் குழாம் என்ற ஸாலோகத்தை அளித்து.

35. அஞ்சக் கரத்தின் அரும்பொருள்: தன்னை,
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து.

பொருள்: ஐந்தெழுத்தின் மேலான பொருள்: நெஞ்சில் நிலையாக இருக்கும்படி அறிவித்து.

36. தத்துவ நிலையத் தந்தெனை ஆண்ட,
வித்தக விநாயக! விரைகழல் சரணே..!!

பொருள்: உண்மை நிலையை எனக்கு அருளி என்னை ஆட்கொண்ட ஞான வடிவாகிய விநாயகப் பெருமானே நறுமணம் கமழும் உன் பாதங்கள் சரணம்.

Post a Comment

Previous Post Next Post