மன்னிப்பு மகத்துவமானது.

மன்னிப்பு எனும் ஒற்றை வாக்கியத்துக்கு இருக்கும் வலிமை அலாதியானது. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் மனிதனாகப் பிறந்த அனைவரும் அள்ளி அணைக்க வேண்டிய குணாதிசயம் மன்னிப்பு...

இந்த மன்னிப்பு எனும் மனநிலை மட்டும் இருந்து விட்டால், உலகில் நிலவும் சிக்கல்களில் பெரும்பாலானவை அனலில் இட்ட பஞ்சைப் போல சட்டெனக் காணாமல் போய் விடும்...

மன்னிப்பு என்பது மனதில் இருக்கும் சுமைகளை இறக்கும் முயற்சி. ஒருவகையில் மன்னிக்கும் போது நாம் அடுத்த நபருக்கு மட்டுமல்லாமல் நமக்கு நாமே நல்லது செய்கிறோம் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்...

அதாவது!, ஒருவரை மன்னிக்கும் போது அவரைப் பற்றிய எரிச்சல், கோபம், பழிவாங்கும் எண்ணம் போன்றவையெல்லாம் சட்டென மறந்து விடுகின்றன...

அதுவரை ஒரு பாறையைப் போல் இருந்த நமது மனம் சட்டென ஒரு இறகைப் போல மாறி பறக்கத் துவங்கி விடுகிறது...

அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது., அது உயிரை உலுக்கும் செய்தி...

அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்று விட்டான் என்று.”. அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். 

ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள்...

கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். உயர்ந்த வலுவான கரடுமுரடான உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு கூறினாள்...

“நான் உன்னை மன்னித்து விட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது” என்று சொல்லி முடிக்கையில் கண்ணீர் தாரை தாரையாய் சூ' -க்கு வழிந்தது...

கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என அய்யுற்றிருந்தார்கள்...(அய்யுறுதல்- சந்தேகம்)

 சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் கூறவியலா நிம்மதி நிரம்பி வழிந்தது...

ஆம் நண்பர்களே.

ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால் தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும் போது உங்கள் மனம் இலகுவாகிறது.

உங்கள் புன்னகை தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவது போல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது.

கோபத்தில் இருந்த நாட்களை விட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.

மன்னிப்பு என்ற வார்த்தை, பெரிய பெரிய சிக்கல்களையும், விவாதங்களையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டு வரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு.

மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது, மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்.

Post a Comment

Previous Post Next Post