சூரியனின் பிறப்பு குறித்து இரு வேறு கதைகளைப் புராணம் சொல்கிறது.
மகாவிஷ்ணு தமது உந்திக் கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார். திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள் மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க ஓம் என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு.
அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை.
மார்க்கண்டேய புராணத்தில் இந்த கதை சொல்லப்பட்டுள்ளது.
சூரியன் பற்றிய மற்றொரு வரலாறு வருமாறு:
பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.
உலகை பாதுகாக்கும் பொருட்டு நவக்கிரக குழு அமைக்கப்பட்டு, சூரியனுக்குத் தலைமைப் பதவி தரப்பட்டது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரமுள்ள ரதத்தில் சூரியன் மேரு மலையைச் சுற்றி வலம் வருகின்றார். அவருக்குச் சாரதி அருணன் ஆவான்.
சூரியனுக்கு சமுங்கை, பிரபை, ரைவத இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் உள்ளனர். அவர்களுள், சுவர்கலா தேவிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். மகன்களுக்கு வைவஸ்தமனு, இயம தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர்.
சூரியனுடன் சுவர்க்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் தொடர்ந்து இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை. அவளுக்கு சக்தி குறைந்துகொண்டே வந்தது. இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.
சுவர்க்கலா தேவி தவம் செய்ய புறப்படுமுன்; தன்னிடம் இருந்த சிவசக்தியினால், தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு “சாயாதேவி” என்று பெயர் சூட்டினாள்.
தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், “நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் மூன்று குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வர வேண்டும்“ என்று கூறினாள்.
அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, “சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்படியே நடக்கின்றேன். ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை” என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.
தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.
அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள். இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.
சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.
Post a Comment