சிவராத்திரி கொண்டாடுவது ஏன்?


 (மகா சிவராத்திரி (11/03/21) )
சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம்அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும். லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வென்னீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, தாழம்பூக்களாலும் மற்றும் பிற மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும். இந்த ஒரு காலம் தவிர,வேறு தருணங்களில் தாழம்பூவை சிவபெருமானுக்கு அணிவிக்கலாகாது. நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓதவேண்டும். மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்யவேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள இருநிலனாய் தீயாகி எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.
சிவராத்திரி கொண்டாடுவது ஏன்?
பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம், உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது? என்று கேட்டாள். மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும் பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்குகால பூஜை நடத்த வேண்டும். வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது, என்றார். சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர். விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். இவ்விரதத்தின் பெருமையைக் கேட்டு யமனும் நடுங்குவதாகவும், எல்லா யாகங்களையும் எல்லா தருமங்களையும்விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது
சிவராத்திரி விரதமுறை:
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிடவேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.
நான்கு கால பூஜைகள்: 
சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய சிறப்பான அபிஷேக, அலங்காரம், நிவேதனம் ஆகியவற்றை பெரியோர்கள் வகுத்துள்ளனர். அதன்படி சிவ வழிபாடு செய்வது நலம்பயக்கும். முதல் காலம்: அபிஷேகம் - பஞ்சகவ்யம். மேற்பூச்சு - சந்தனம். வஸ்திரம்-பட்டு. ஆடையின் வண்ணம் - சிவப்பு,நிவேதனம் - காய்கறிகள், அன்னம். வேதம் - ரிக். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது - சிவபுராணம். தீபம் - விளக்கெண்ணெய். தத்வ தீபம் - ரதாரத்தி. அட்சதை - அரிசி. மலர் - தாமரை. பழம் - வில்வ பழம்.இரண்டாம் காலம்: அபிஷேகம் - பஞ்சாமிர்தம். மேற்பூச்சு - பச்சைக்கற்பூரம். வஸ்திரம் - பருத்தி. ஆடையின் வண்ணம் - மஞ்சள், நிவேதனம் - பரமான்னம், லட்டு. வேதம் - யஜூர். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது - இருநிலனாய்... பதிகம். தீபம் - இலுப்பை எண்ணெய்.தத்வ தீபம் - ஏக தீபம். அட்சதை - யவை. மலர்கள் - தாமரை, வில்வம். பழங்கள் - பலாப்பழம்.மூன்றாம் காலம்:அபிஷேகம்- தேன். மேற்பூச்சு - அகில். வஸ்திரம் - கம்பளி. ஆடையின் வண்ணம் - வெள்ளை,நிவேதனம் - மாவு, நெய் சேர்த்த பலகாரங்கள், பாயசம். வேதம் - சாமம். திருமுறை பஞ்ச புராணத்துடன் - லிங்கபுராண குறுந்தொகை. தீபம் - நெய். தத்வ தீபம் - கும்ப தீபம். அட்சதை - கோதுமை. மலர்கள் - அறுகு, தாழம்பூ. பழங்கள் - மாதுளை.நான்காம் காலம்: அபிஷேகம் - கருப்பஞ்சாறு. மேற்பூச்சு - கஸ்தூரி. வஸ்திரம் - மலர் ஆடை. ஆடையின் வண்ணம் - பச்சை. நிவேதனம் - கோதுமை, சர்க்கரை, நெய் கலந்த பலகாரங்கள். வேதம் - அதர்வணம். திருமுறை பஞ்ச புராணத்துடன் - போற்றித் திருத்தாண்டகம். தீபம் - நல்லெண்ணெய். தத்வ தீபம் - மகாமேரு தீபம். அட்சதை - உளுந்து,பயறு முதலான ஏழு தானியங்கள். மலர்கள் - எல்லா வகை மலர்களாலும். பழங்கள் - வாழை முதலிய அனைத்து வகைப்பழங்களும்.
சிவராத்திரி விரத மகிமை: 
விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.

சிவனுக்குரிய விரதங்கள்: 

சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு அவையாவன:சோமவார விரதம்: திங்கட்கிழமைதிருவாதிரை விதரம்: மார்கழி திருவாதிரைமகா சிவராத்திரி: மாசி தேய்பிறை சதுர்த்தசிஉமா மகேஸ்வர விரதம்: கார்த்திகை பவுர்ணமிகல்யாண விரதம்: பங்குனி உத்திரம்பாசுபத விரதம்: தைப்பூசம்அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்சஅஷ்டமிகேதார விரதம்- தீபாளி அமாவாசை
நிறைவே காணும் மனம் வேண்டும் சிவனே அதை நீ தரவேண்டும்-சிவராத்திரி பிரார்த்தனை
உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே!எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல்போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழுஎன்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே!கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள்மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே!சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெலாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்துஎங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே!உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாயநாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.ஐந்தெழுத்து நாயகனின் ஐந்து அடையாளம்: சிவபெருமானுக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.

Post a Comment

Previous Post Next Post