எவரொருவர் அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வருகிறார்களோ அவர்களுக்கு வாழ்வில், எந்தக் கஷ்டங்களும் துயரங்களும் இல்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஸ்ரீலக்ஷ்மி தேவிக்கான மந்திரங்களையும் ஸ்ரீகுபேரருக்கான மந்திரங்களையும் முக்கியமான நாட்களில் ஜபித்து வேண்டிக்கொள்ளவேண்டும். தினமுமே கூட சொல்லி வழிபடலாம்.
வீட்டில் இருக்கும் தேவியர் படங்களுக்கு மல்லிக்கைப் பூக்களால் அலங்கரித்து, பூஜித்து பிரார்த்தனை செய்வது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.
இதேபோல், வீட்டில் உள்ள குபேரர் படத்துக்கும் மகாலக்ஷ்மிபடத்துக்கும் மல்லிகைப் பூக்களால் அலங்கரித்து வழிபடுவது கூடுதல் பலன்களை வழங்கவல்லது. அதேபோல், வீட்டில் உள்ள பணம் வைக்கும் பீரோவிலும் தொழில் செய்யும் இடத்தில் உள்ள பணப்பெட்டியிலும் தினமும் ஒரேயொரு மல்லிகைப்பூவை வைப்பது தொழிலில் லாபத்தைக் கொடுக்கும். வீட்டில் ஐஸ்வர்யத்தைப் பெருக்கும் என்பது ஐதீகம்.
அதேபோல, மகாலக்ஷ்மி தேவிக்கு மல்லிகை மலர் ரொம்பவே இஷ்டம். முடியும் போதெல்லாம் மல்லிகைச் சரங்களை, அப்படியே மகாலக்ஷ்மித் தாயாருக்கு சார்த்துங்கள். முக்கியமாக, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மல்லிகைச் சரம் சார்த்தி வழிபடுங்கள்.
முக்கியமாக, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், மகாலக்ஷ்மி தாயாரை வணங்கும் போது, கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் சொல்லி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமைகளில், அவல் பாயசம், பால் பாயசம் நைவேத்தியம் (வெண்மை நிறம் கொண்ட பாயசம்) செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
இதேபோல், சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுவதும், கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். வீட்டில் பொன்னும் பொருளும் தங்கும். ஐஸ்வர்யம் பெருகும். அடகில் வைத்திருக்கும் நகைகளை மீட்டெடுப்பதுடன் புதிய ஆபரணச் சேர்க்கையும் நிகழும்.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி :
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரம்மாத்மகாய தீமஹி:
தந்நோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ப்ரசோதயாத்
என்கிற சொர்ண ஆகர்ஷண பைரவ காயத்ரியை தினமும் சொல்லி வருவது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும். முக்கியமாக, அஷ்டமியில் சொல்லி பைரவ வழிபாடுசெய்வது வீட்டின் தரித்திர நிலையையெல்லாம் ஓடச் செய்யும். சுபிட்சம் நிலவும்.
அடுத்து, சொர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரமும் சக்தி வாய்ந்தது. இதனையும் தினமும் சொல்லி வழிபடலாம். தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி நாட்களில் சொல்லி வழிபடலாம்.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம், க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத் தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ;
எனும் மூலமந்திரத்தையும் ஜபித்து வாருங்கள். முக்கியமாக, பைரவரின் வாகனமான நாயை மனதில் நினைத்து, தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வாருங்கள். டீக்கடையில் நின்றுகொண்டிருக்கும் போது, அருகில் தெருநாய் வந்தால் இரண்டு பிஸ்கட்டாவது கொடுங்கள்.
பைரவரின் பரிபூரண அருளைப் பெறுங்கள். இதுவரை குடும்பத்தில் பட்ட கஷ்டமெல்லாம் போக்கி, வாழ்க்கையை வளப்படுத்தி அருளுவார் பைரவர்.
Post a Comment